538. ஷூ எறியும் கலாச்சாரம்!
எதிர்ப்பைத் தெரிவிக்க சமீபத்தில் மிகவும் பிரபலமான வழியாக இது கருதப்படுகிறது! பொதுவாக, நாம் கடுங்கோபத்தில் இருக்கும்போது, எதிராளியைப் பார்த்து "செருப்பால் அடிப்பேன்" என்று கூறுவது சகஜம் தான் என்றாலும், செருப்பை முன் வைத்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கை (காலில் போட்டுக் கொண்டு நடை பயில்வதை விடுத்து!) எதிராளிக்கு அவமானம் தரும் ஒன்றாகவே கருதப்படுகிறது. அதனால் தான், பெரியார் பக்தர்கள், கடவுளர்களுக்கு செருப்பு மாலை அணிவித்து, நாத்திகத்தை பரப்ப (அல்லது மூட நம்பிக்கைகளை ஒழிக்க - இப்படிக் கூறவில்லை என்றால், பெரியார் வாரிசுகள் என்னை கும்மி விடுவார்கள் :)) முயற்சித்தார்கள்! அதனால், ஆத்திகமும், ஆன்மீகமும் வேக வேகமாக வளர்ந்தன என்பது இந்த தலைப்புக்குச் சம்பந்தமில்லாத ஒன்று!
அது போல, பிடிக்காத ஒருவரின் (எ.கா:ஹிட்லர் ராஜபக்ஷே!) உருவ பொம்மையை எரிப்பதற்கு முன்னால், அதற்கு செருப்பு மாலை அணிவித்து அழகு பார்ப்பதும் நாம் அனுசரிக்கும் ஒன்று தான்! எப்படி கற்களை குறி பார்த்து வீசுவதில் வழக்கறிஞர்கள் திறமைசாலிகளாக விளங்குகிறார்களோ, இந்த செருப்பு வீசுவதில், பத்திரிகையாளர்களும், மாணவர்களும் முன்னணியில் இருக்கிறார்கள். அதனால், குறி பார்த்து செருப்பு வீசுவதில் நல்ல திறமை பெற விரும்புபவர்கள் இவர்களை நாடி பயிற்சி பெறுவது அவசியமாகிறது. மீடியாவைத் தாக்கி எழுதும் புண்ணியவான்கள் (என்னையும் சேர்த்து) சற்று உஷாராக இருப்பது, அவர்கள் உடம்புக்கு நல்லது!
செருப்பு வீசுவதன் வாயிலாக, வீசுபவருக்கு 15 நிமிடப் புகழ் உடனடியாக கிடைத்து விடுகிறது என்றாலும், சில சமயங்களில் "தர்ம அடி" கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அது போல, ஒற்றைச் செருப்போடு காவலர்களால் தரதரவென இழுத்துச் செல்லப்படும் அசௌகரியத்தையும் அவமானத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. மிச்சமிருக்கும் ஒத்தைச் செருப்பை பயன்படுத்தவும் இயலாது!
அதனால் தான், இராக்கில் ஜார்ஜ் புஷ் மீது செருப்பெறிந்த இராக்கிய பத்திரிகையாளர், தனது 2 ஷூக்களையும் சமயோஜிதமாக கழற்றி வைத்திருந்து, அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக புஷ் மீது வேகமாக எறிந்து தன் எதிர்ப்பைத் தெரிவித்தார். இப்படிச் செய்வதன் மூலம், செருப்பு எதிராளியைத் தாக்கும் probability இரண்டு மடங்காகிறது. அந்த "இரட்டை ஷூ" தாக்குதலிலிருந்து மிக லாவகமாக தப்பித்த ஜார்ஜ் புஷ், அமெரிக்கர்கள் ஏன் தடகள விளையாட்டில் உலகில் தலை சிறந்தவர்களாக விளங்குகிறார்கள் என்ற விசயத்தை நமக்குப் புரிய வைத்தார்! புஷ்ஷின் பாதுகாவலர்களே, அவரது லாவகத்தைக் கண்டு அசந்து போய் விட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! புஷ் மீது செருப்பு வீசப்பட்ட அந்த கண்கொள்ளா காட்சியை இங்கு பார்க்கலாம்.
புஷ் இடத்தில், மன்மோகன் சிங்கோ வாஜ்பாயோ இருந்திருந்தால் மேட்டர் விபரீதமாகக் கூட போயிருக்கக் கூடும். அதனால், வயதில் சிறியவர் தான் பிரதமராகவோ, அதிபராகவோ இருக்க வேண்டும் என்று கூறவில்லை. Alert-ஆக இருத்தல் வேண்டும். எண்பது வயதைத் தாண்டி விட்டாலும், அத்வானிஜி அலர்ட்டாகத் தான் இருக்கிறார் என்பது என் கருத்து. (இந்துத்துவா முத்திரை குத்த நினைப்பவர்களுக்கு, இது சரியான வாய்ப்பு:) )
சக பதிவர்களை அவமானப்படுத்த நினைக்கும் "முற்போக்கு" அறிவுஜீவிப் பதிவர்கள், "இத்தகைய 'அழுகிய' மனப்பான்மை கொண்டவரை மலம் தோய்ந்த செருப்பால் அடிக்க வேண்டும்" என்று ஆரோக்கியமாக எழுதும் பழக்கம், தமிழ் இணையத்தில் தொன்றுதொட்டு இருந்து வருகிறது! செருப்பு போட்டு நடக்கும்போது, மலத்தை மிதித்து விட்டாலே, அருவருப்பாக உணரும் நாம், செருப்பை "அதில்" தோய்த்து அடிக்கப்படுவதாக எண்ணும்போது, எப்படி உணர்வோம்? அதாவது, செருப்புடன் மலம் கலக்கும்போது, அவமானத்தின் வீரியம் அதிகமாகிறது! அது போல "நல்ல பீயள்ளிய விளக்கமாறால் அடிக்க வேண்டும்" என்றும் எழுதும் வழக்கமும் தமிழ் வலையுலகில் விரவி இருந்தது! இப்போதே துர்நாற்றம் அதிகமாக வீசுவதால், இந்த மேட்டரைத் தொடர விருப்பமில்லை :)
செருப்பு அதிகம் புழங்காத காலத்தில், 'நீ என் கால் தூசுக்குப் பெற மாட்டே' என்ற உபயோகம் பரவலாகக் காணப்பட்டது!
புஷ்ஷுக்கு அடுத்தபடியாக, சமீபத்தில், இங்கிலாந்து சென்ற சீனப்பிரதமருக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் செருப்பு "மரியாதை" செய்யப்பட்டது, "க்யான் சூன் பூங் சியாங்" என்று புரியாத சீன மொழியில் உரையாற்ற அவரையெல்லாம் உலகப் பிரசித்தி பெற்ற கேம்பிரிட்ஜ்ஜுக்குள் யார் விட்டார்கள் என்பது வேறு விஷயம்! அது போல, சமீபத்தில் சுவீடன் சென்ற இஸ்ரேலியத் தூதர் ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகத்தில் உரையாற்றியபோது, இரு "பாலஸ்தீனிய ஆதரவு" மாணவர்கள் அவர் மீது ஷூ வீசினர். அது அவர் வயிற்றில் பட்டு, அவருக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியதாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன ;-)
இன்று, (சீக்கியர்களுக்கு எதிரான 1984-ஆம் ஆண்டு வன்முறைக்குக் காரணமாக உலகமே நம்பும்) ஜகதீஷ் டைட்லரை குற்றமற்றவர் என்று CBI கூறியிருப்பது குறித்து தனக்கு மகிழ்ச்சி என்று பேசிய ப.சிதம்பரத்தின் மீது கடுங்கோபம் கொண்ட ஜர்னைல் சிங் என்கிற சீக்கியப் பத்திரிகையாளர் ஒருவர், அவர் மீது செருப்பை வீசியிருக்கிறார்! ஜர்னைல் Line & Length மீது அக்கறையின்றி UNDERARM வீச்சைப் பயன்படுத்தியதால், வீச்சில் வேகமும் இல்லை, குறியும் தப்பி விட்டது என்றும், வீச்சிலிருந்து தப்பியதில் ப.சிதம்பரத்தின் லாவகத்திற்கு எந்தப் பங்கும் கிடையாது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இராக்கிய நிருபர் போல, ஜர்னைல் தனது 2வது ஷூவையும் பயன்படுத்தாமல் விட்டது தமிழகத்தில் பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கலாம் :)
ஜர்னைல் ஒரு ஷூ வீசியதற்கே, அவருக்கு அகாலிதளம் கட்சியின் இளைஞரணி ரூ.2 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது. 4 லட்சம் பெறுவதற்கான வாய்ப்பை ஜர்னைல் இழந்து விட்டதி எண்ணி வருத்தமாக உள்ளது ;-) இனிமேல், பிரஸ் கூட்டங்களில் பத்திரிகையாளர்கள் வெறுங்காலோடு தான் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று சந்தேகிக்கிறேன்...
விக்கிபீடியாவில் ஷு டாஸிங் (Shoe tossing) என்பது குறித்து இங்கு வாசிக்கவும். வாசிக்க சுவாரசியமான தகவல்கள் உள்ளன.
பிற்சேர்க்கை: பத்ரி தனது இந்த இடுகையில் ஏதோ ஒன்றை (தங்கள் கோமணம், ஜட்டி உட்பட!) எரித்து (அல்லது கறுப்புக்கொடி காண்பித்து) தங்கள் கோபத்தை / எதிர்ப்பைத் தெரிவிக்க விரும்புவர்களுக்காக ஒரு குறிப்பிட்ட இடத்தை பிரத்யேகமாக ஒதுக்கி அதற்கு அனுமதி அளித்து விடலாம் என்ற வகையில் ஒரு கருத்தைச் சொல்லியிருந்தார்.
அதன் எக்ஸ்டென்ஷனாக, இது போல ஷூ எறிபவர்களுக்கும் தனியான விசாலமான இடத்தை ஒதுக்கி விட்டதால் நல்லது. யாருக்கும் அடிபடும் அபாயமில்லை. அவர்களும் ஃபிரிஸ்பி போல செருப்பை வீசி விளையாடலாம். நல்ல உடற்பயிற்சி! தூக்கி எறிந்த செருப்பை திரும்ப எடுத்து வந்து தர நாய்களையும் கூட்டிச் சென்றால் நல்லது!
எ.அ.பாலா
17 மறுமொழிகள்:
Shoe Testing :)
ஹா ஹா ஹா. பயங்கர நகைச்சுவை. நான் சிரித்த சிரிப்பில் பக்கத்தாத்து குழந்தை மிரண்டு ஓடிவிட்டது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஐந்து பர்சன்ட் வாக்கு வங்கி, நிரம்பிவிட்டது.
mathibala
அப்றம் “லாவகம்” இல்லை “லாகவம்”!!
ராகவன் சார்,
//பக்கத்தாத்து குழந்தை மிரண்டு ஓடிவிட்டது.
//
குழந்தைக்கு ஏன் பூச்சாண்டி காட்றீங்க ? இங்க பதிவர்களுக்கு காட்டுவது போதாதா ? ;-)
மதிபாலா,
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
வ.சுந்தர்,
//அப்றம் “லாவகம்” இல்லை “லாகவம்”!!
//
புரியலை, நான் சற்று வெண்குழல் விளக்கு :)
//ஐந்து பர்சன்ட் வாக்கு வங்கி, நிரம்பிவிட்டது.
mathibala
//
யாரைக் குறிப்பிடுகிறீர்கள் ?
அட... நெறய எடத்துல “லாவகமா” அப்டீன்னு எளுதியிருக்கீங்களே. அதை லாகவமா-ன்னு சொல்லணும்னு சொன்னேன். அம்புட்டுத்தான். நானும் பொறந்ததுலருந்து லாவகம்னே நெனச்சுக்கிட்டிருந்தேன். ரெண்டுவருஷம் முன்னாடி ஹரியண்ணா மரத்தடில திருத்தினதுலருந்து லாகவம்னே எழுதறேன்.
மத்தபடி செருப்பை எடுத்து வீசறதைப் பத்தி எனக்குக் கருத்தொண்ணுமில்லை. ஹிஹி. நல்ல வேளை. அந்தகாலத்து மரத்தாலான “பாதுகை”யா இருந்திருந்தா என்ன ஆவறது! மண்டை ஒடஞ்சுரும்! பிடிச்சாலும் கை சுள்ளுன்னு வலிக்கும். இல்லியா?
கொடும்பாவி எரிப்பு-ன்னு அடிக்கடி நூஸ் வரும். அதென்ன “கொடும்பாவி”ன்னு யோசிச்சிருக்கேன். கேரள மாந்திரீகர்கள் பொம்மையை வைத்து ஊசி குத்தி செய்வினை செய்வார்களாமே. அதோட விட்டகுறை தொட்டகுறைதான் தமிழ்நாட்டோட “கொடும்பாவி” எரிப்போன்னு தோணிருக்கு!.
என்னமோ போங்க!
அதன் எக்ஸ்டென்ஷனாக, இது போல ஷூ எறிபவர்களுக்கும் தனியான விசாலமான இடத்தை ஒதுக்கி விட்டதால் நல்லது. யாருக்கும் அடிபடும் அபாயமில்லை. அவர்களும் ஃபிரிஸ்பி போல செருப்பை வீசி விளையாடலாம். நல்ல உடற்பயிற்சி! தூக்கி எறிந்த செருப்பை திரும்ப எடுத்து வந்து தர நாய்களையும் கூட்டிச் சென்றால் நல்லது!//
முதன் முறையாக வந்தேன்.சிரித்தபடியே செல்கிறேன்.நன்றி.
இவ்வளவு துணிச்சலோடும், நேர்மையோடும் எழுதும் பதிவர்களின் மீது எப்படி செருப்பு வீசுவார்கள்? Virtual Throwing என்று ஏதாவது வரலாம். அருமையான கட்டுரை.
ஸ்ரீ....
உங்கள் பதிவின் சுட்டியை பெரியவர் ஒருவருக்கு அனுப்பினேன். 80களில் டெல்லியில் வாழ்ந்தவர். அவரது மறுமொழி -
-------------------------
ஒரு 5 வயது சீக்கியக் குழந்தையின் கழுத்தில் எரிகிற டயரைப் போட்டுப் பெற்றோரின் கண்முன்னேயே கொளுத்தப்படுவதை நீங்கள் பார்த்ததுண்டா?
1984ஆம் ஆண்டு டெல்லியில் நான் பார்த்திருக்கிறேன்.
புதுடெல்லி ரயில் நிலையத்துக்கு வரும் எல்லா ரயில்களிலும் கக்கூஸ் உட்படத் தேடி, உயிருக்கு அஞ்சி சீட்டுக்கடியில் ஒளிந்திருந்தவரின் தலைமயிரைப் பிடித்து இழுத்துக் கொன்ற எண்ணற்ற சம்பவங்கள் தெரியுமா? மனிதர்களாய்க் கிளம்பிச் சடலங்களாய் வந்திறங்கிய கதைகள் எத்தனை என்று தெரியுமா?
சீக்கியர் வைத்திருந்த கடைகளைத் தேடிப்போய் நெருப்பிட்டுக் கொளுத்தி டி.வி. விடியோ ப்ளேயர் என்று எல்லாவகை விலையுயர்ந்த பொருட்களையும் தூக்கிக் கொண்டுபோக, போலீஸ் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது உங்களுக்குத் தெரியுமா?
3 நாட்கள் நகரமே ஸ்தம்பித்துக் கிடந்தது. இரவெல்லாம் ஷூட் அட் சைட் உத்தரவோடு ராணுவ ரோந்து. இவையெல்லாம் பின்னர் நடந்தவை.
முதலில் நடந்தது, போலீஸ் காவலோடு சென்று, ஆண், பெண், குழந்தை என்ற வித்தியாசமில்லாமல் சீக்கியர் குரூரமாகக் கொன்று குவிக்கப்பட்டதுதான்.
பலர் தமது சிகை, தாடி போன்ற சீக்கிய அடையாளங்களை விரைந்து மாற்றிக்கொண்டு உயிர் தப்ப முயன்றனர். பலர் இந்து நண்பர்களின் வீடுகளுக்குள் போய் ஒளிந்து கொண்டனர். அப்படியும் விடாமல் வீடுவீடாகச் சென்று தேடி அவர்கள் தாக்கப்பட்டனர்.
இதையெல்லாம் நீங்கள் கேள்விப்பட்டதாவது உண்டா?
ஒரு ஷூ எறிந்ததைப் பற்றி நம்மால் நக்கலாகத்தான் எழுத முடியும். அவர்களது உள்ளத்தில் கனன்றுகொண்டிருக்கும் கோபத்தை நம்மால் புரிந்துகொள்ளவோ, தணிக்கவோ முடியாது.
குறைந்த பட்சம் அதைச் சிறுமப்படுத்தி நம்மை நாகரீகமடைந்தவர்களாகக் காட்டிக்கொள்ளாமல் இருக்கலாம்.
வற்றாயிருப்பு சுந்தர்,
மீள்வருகைக்கும், விளக்கத்திற்கும் நன்னி :)
ஷண்முகப்பிரியன், ஸ்ரீ,
பாராட்டுக்கு மிக்க நன்றி.
ஜடாயு,
//இதையெல்லாம் நீங்கள் கேள்விப்பட்டதாவது உண்டா?
ஒரு ஷூ எறிந்ததைப் பற்றி நம்மால் நக்கலாகத்தான் எழுத முடியும். அவர்களது உள்ளத்தில் கனன்றுகொண்டிருக்கும் கோபத்தை நம்மால் புரிந்துகொள்ளவோ, தணிக்கவோ முடியாது.
குறைந்த பட்சம் அதைச் சிறுமப்படுத்தி நம்மை நாகரீகமடைந்தவர்களாகக் காட்டிக்கொள்ளாமல் இருக்கலாம்.
//
சீக்கியக் கலவரம் பற்றி வாசித்ததுண்டு, கேள்விப்பட்டதும் உண்டு....
நீங்கள் குறிப்பிடும் பெரியவர், கலவரத்தைப் பார்த்ததாலேயே மற்றவரைத் தவறாக நினைக்கும் தகுதி அடைந்து விடுகிறாரா என்ன? முதலில், அந்த வன்முறையைப் பார்க்காமலேயே, சீக்கியர்களது உள்ளக் கொதிப்பை என்னைப் போன்ற பலரால் உணர முடிகிறது என்பதை அந்தப் பெரியவரிடம் சொல்லவும்.
பொதுவாக ஷூ எறிதலை குறித்து நகைச்சுவையாக எழுதினேனே ஒழிய, சீக்கியரை/ஜர்னைலின் இந்த எதிர்ப்பை சிறுமைப்படுத்த அல்ல, இந்த ஷூ எறிதலை நாகரீகமற்ற செயலாகவும் நான் பார்க்கவில்லை!
மேலும் இந்த ஷு எறிதலை நான் கண்டனம் எதுவும் செய்யவில்லை, ஏனெனில் அதை ஒரு சிறிய தவறாகக் கூட நான் எண்ணவில்லை, சீக்கியர்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியை வைத்துப் பார்க்கும்போது :(
இந்த விளக்கத்தை நான் இடுகையில் குறிப்பிடாமல் விட்டது என் தவறு தான். அதனால் தான், அந்தப் பெரியவர் இப்படி சொல்லியிருக்கிறார் போலும். நன்றி.
எ.அ.பாலா
Comment from Twitter.com:
From
dynobuoy@anbudan_BALA
Shoe Tossing - அருமையா வந்திருக்கு! இதைப்ப்போன்ற கட்டுரைகளை நீங்க முயற்சிக்கலாம்! 1980ஸ் ஆவி படிச்ச எஃபக்ட். Kudos!
7:49 PM Apr 7th from twhirl in reply to anbudan_BALA
Try this one.. very interesting..
http://iamverysimple.blogspot.com/2009/04/grandpas-challenge-game.html
shoo erinjadha vida adhai therdhalukkaga mannichchaar paaru idhai vida kevalam naattil edhuvum illa.
Post a Comment